எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதிலும், கடையடைப்பு மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்களில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உட்பட எதிர்க்கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டங்களினால் பொதுமக்களின் இயல்பு வாழ்வு முற்றாக பாதிக்கப்பட்டதுடன், பல இடங்களில் சிறு சிறு அசம்பாவிதங்களும் இடம்பெற்றுள்ளன.
எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கு அமைய இடதுசாரிகள் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், திட்டமிட்டபடி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.
புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடைகள் மூடப்பட்டிருந்ததுடன், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
தமிழகத்தில் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டிகள், சிற்றூர்திகள், பாரவூர்திகள் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் முழு அடைப்பில் பங்கேற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் சாலை மறியல், தொடரூந்து மறியல், ஆர்ப்பாட்டம் என்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
டெல்லி ராஜ்காட்டிலிருந்து ராம்லீலா மைதானம் நோக்கி நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி பங்கேற்றதுடன், குலாம் நபி ஆசாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
டெல்லியில் அமைந்துள்ள காந்தி சாமதியில் மலர் தூவி அஞ்சலியைச் செலுத்திய ராகுல் காந்தி உள்ளிட்டோர், தங்கள் எதிர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்தனர்.
இதேவேளை புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் மார்கஸ் கம்யூனிஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அவர்கள் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.