தமது சுய இலாபத்திற்காக ஓய்வுபெற்ற சில படை அதிகாரிகளும், சில அரசியல்வாதிகளும், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை விமர்சனம் செய்து வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் தற்போதைய பாதுகாப்பு தயார் நிலை குறித்து விளக்கமளிக்கும் ஊடக அறிக்கையொன்றிலெயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், முன்னாள் இராணுவ மூத்த அதிகாரிகளின் ஆலோசனைகளும் தேவையான நேரத்தில் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையிலேயே யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன எனவும், இதனை சில அரசியல்வாதிகளும் முன்னைய அதிகாரிகளும் தங்களது சுய லாபத்திற்காக மக்களை திசை திருப்பும் நோக்கில் உண்மைக்கு புறம்பானவகையில் பிரச்சாரம் செய்துவருகின்றனர் எனவும் அவர் சாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இவ்வாறு இராணுவ முகாம்களை மாற்றுகின்றமையினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் மகேஸ் சேனநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.