மல்லையா வெளிநாடு தப்பி செல்ல நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உதவியதாக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.
மல்லையாவிற்கு எதிராக சி.பி.ஐ.பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸ் வலுவிலக்க செய்யப்பட்டதால் தான், மல்லையாவால் தப்பிக்க முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு, ஒக்டோபர் 24 ஆம் நாள் புறப்படுவதை தடுக்கவும் என்று இருந்த லுக் அவுட் நோட்டீஸ், நிதித்துறையை சேர்ந்த ஒருவரின் உத்தரவால் மாற்றப்பட்டதாக கூறியுள்ளார்.
இதேவேளை, ஊழல் மோசடி குற்றச்சாட்டிற்குள்ளான நிலையில், லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையா, தான் நாட்டை விட்டு செல்லும் முன்னர் நிதி அமைச்சரை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, விஜய் மல்லையாவுடனான சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்து, அவரது கருத்திற்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.