போர் நிறைவடைந்த பின்னர் நிலவுகின்ற பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கான பல்வேறு தீர்வுகள் அடங்கிய புதிய யோசனை, தம்மால் ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் முன்வைக்கப்படவுள்ளதாக இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகப் பிரதானிகளுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் 25ம் நாள் இந்த யோசனை ஐக்கிய நாடுகள் பொதுசபையில் முன்வைக்கப்படும் என்றும் தகவல் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பில் எந்தவித பலவீனமும் ஏற்படவில்லை என்றும், எரிபொருள் விலை சூத்திரத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதா அல்லது சீர்த்திருத்துவதா என்பன தொடர்பில் தீர்வு ஒன்று எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகின்றமை தொடர்பில் சிறப்பு காவற்துறை குழுவொன்று விசாரணை நடத்தி வருவதாகவும் இலங்கை சனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.