இலங்கை போருக்கு இந்திய அரசாங்கம் உதவியதாக, மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸும் என்ன பதில் சொல்லப்போகின்றன என்று தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச புதுடில்லியில் வைத்து இந்திய ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கிய போது, இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உதவியளித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழகம் பொன்னேரியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பன்னீர்செல்வம், மகிந்த ராஜபக்சவின் கருத்து தொடர்பில், ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியினரும் என்ன பதிலளிக்கப்போகின்றனர் என்று வினவியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.