வடகொரியத் தலைவர் கிம் யொங் உன்னுடன் அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் இன்று செவ்வாய்கிழமை வட கொரியா சென்றுள்ளார்.
இந்த சந்திப்பிற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் அவரது மனைவி கிம் ஜாங்-சூக் ஆகியோர் 3 நாள் பயணமாக இன்று காலை வடகொரியத் தலைநகர் பியோங்யாங் சென்றடைந்த நிலையில் அவர்களை வடகொரியத் தலைவர் கிம் யொங்-உன்னும், அவரது மகைவி ரி சோல்-ஜூவும் வரவேற்றுள்ளனர்.
வடகொரியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மேலும் ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகவே இரண்டு நாடுகளின் தலைவர்களது இந்த சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் தென் கொரியா மற்றும் அமெரிக்காவோடு இதற்கு முன்னர் மேற்கொள்ளாத வகையிலான சந்திப்புக்களை வட கொரியா நடத்தி வருகிறது.
எனினும் இரண்டு தரப்பினரும் பொதுவான நோக்கங்களை மட்டுமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ளன.
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நடுவராக தென் கொரியா முக்கிய பங்காற்றி வருவதுடன், அதன் ஒரு முயற்சியாகவே தென்கொரிய அதிபர் வடகொரிய அதிபரைச் சந்தித்து பேச்ச நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.