இறுதி போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக, அரசாங்கத்திலிருந்து விலகிய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணி தெரிவித்துள்ள கருத்தை சிறிலங்கா இராணுவம் முற்றாக மறுத்துள்ளது.
கடந்தவாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எவரையும் இராணுவத்தினர் கொலை செய்யவில்லை, எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் கருத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும், இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
இறுதி போர்க் காலத்தில், எஸ்.பி.திசாநாயக்க அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்துள்ளார் எனவும், ஆகவே அவ்வாறான ஒருவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறும் கருத்தை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இராணுவப் பேச்சாளர், இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறும் கருத்தானது அடிப்படை ஆதாரமற்றது என்று கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய கருத்தை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.