அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவுப் புறக்கணிப்புத்தில் ஈடுப்பட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை இலங்கை அரசு உடனடியாக நிறைவேற்றி, அவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையில் முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் உணவுப் புறக்கணிப்புத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்பதையும், ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் முறையான விசாரணையோ அல்லது விடுதலையோ இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள அந்த அரசியல் கைதிகளும் மனிதர்களே என்பதையும், அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
அவர்களும் அன்பான குடும்பத்துடனும் பாசமான பிள்ளைகள், உறவினர்கள், சுற்றத்தாருடனும் மகிழ்வாக வாழப் பிறந்த இந்த நாட்டின் பிரஜைகளே என்பதை அனைவரும் உணர வேண்டும் எனவும் அது வேண்டுகோள் விடுத்துள்ளது.
வேறு எந்தவொரு வழியுமற்ற நிலையில் மீண்டும் மீண்டும் அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்கின்ற உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அது அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன் அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற வகையில் உடனடியாக விடுவிக்குமாறும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்ள கோரியும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நாங்கள், அரசியல் கைதிகள் என்ற பெயரில் சிறையில் அடைக்கப்பட்டு வாழ்வுரிமை மறுகப்படும் சமூக அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, இன, மத, மொழி பிரதேச எல்லைகளைத் தாண்டி மனிதாபிமானமுள்ள அனைவரையும் அணிதிரளுமாறும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அறிக்கையின் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.