அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புகளால் அழைப்பு விடுக்கபட்டுள்ளது.
இது தொடர்பாக வவுனியா தொடருந்து நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஒன்று கூடிய வவுனியா மாவட்ட பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று கலந்துரையாடியுள்ளனர்.
இதன்படி எதிர்வரும் சனிக்கிழமை 22 ஆம் நாள் காலை 10 மணிக்கு வவுனியா மாவட்டச் செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்வதாக சந்திப்பில் முடிவெடுக்கபட்டுள்ளது.
அத்துடன் பொது அமைப்புகள் மற்றும் அரசியல்கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் சனநாயக கட்சி, ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி, புதிய சனநாயக மாக்சிச லெனினிச கட்சி, சனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர் இந்திரராஜா, நகரசபை தலைவர் கௌதமன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.