ஊழல் குற்றச்சாட்டில் கடந்த இரண்டு மாதமாக சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
நவாசுடன் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள அவரது மகள் மரியமுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இலண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த யூலை மாதம், நவாஸ் ஷெரீஃப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
அவருடன் அவரது மகள் மரியமும் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், மரியத்துக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருபது இலட்சம் பவுண்ட் அபராதமும் விதித்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தங்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர்கள் இருவரும் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், அதனை இன்று விசாரித்த பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நவாசின் மனைவி குல்சூம் நவாஸ் கடந்த வாரம் பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் இறந்த நிலையில் இவர்களின் விடுதலைக்கான இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் படி அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ள நிலையில், அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் உற்சாகத்துடன் திரண்டு இருந்த காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.