சிறிலங்கா அரச படைகளுக்கு தமிழ்மக்களைக் காட்டிக்கொடுத்தும், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை மூடிமறைத்தும் வந்த துணை இராணுவக் குழுவான ஈபிடிபித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களைப் பிடித்த ஒரு புற்றுநோய் என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியா சென்றிருந்த ஈபிடிபி கட்சித்தலைவர் டக்ளஸ் தேவானந்தா இந்திய ஊடங்களிற்கு கருத்துரைத்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து தரக்குறைவாக கருத்து வெளியிட்டுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிக் கதைக்க டக்ளஸ் தேவானந்தா அருகதையற்றவர் என்பதையும் கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதி போரில் ஒன்றரை இலட்சம் மக்கள் சிங்களப் படைகளால் கொன்று குவிக்கப்பட்டதற்கும், தமிழ் மக்களின் கவசங்களாக இருந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதற்கும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களது துணை இராணுவக் குழுக்களின் காட்டிக்கொடுப்புக்களே பிரதான காரணிகளாக இருந்தன எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் தமிழ்மக்களது உரிமைக்காக தங்களது உயிர்களைத் தியாகம் செய்து போராடியவர்கள் எனவும், அவர்களைப் பற்றிக் கதைப்பதற்கு அரசபடைகளோடு துணை நின்ற துணை இராணுவக் குழுக்களான அடிமைகளுக்கு எந்த அருகதையும் இல்லை என்றும், விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றி டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கூறியதற்காக அவர் தமிழ் மக்களிடத்தில் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.