உரிய நேரத்தில் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
வடமாகாண சபை கூடுதல் பணிகளைச் செய்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது தெரிவுகள் குறித்து வடமாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னுடன் பேசலாம் என்றும் தெரிவித்துள்ள அவர், சிலர் பிரிந்து போக விரும்புவதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு என்ற கருத்து வெளியில் வருகின்றது என்றும், எனினும் கூட்டமைப்பை எவராலும் சிதைக்கவே முடியாது எனவும் கூறியுள்ளார்.
எவரும் தன்னை வழிநடத்தவில்லை தமிழ் மக்களின் நலன் கருதியே தான் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், எமது பிரச்சினையில் இந்தியா அக்கறையாக இருக்கின்றது எனவும் கூறியுள்ளார்.
முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணத்தை தாங்கள் முரண்பாடான விடயமாகப் பார்க்கவில்லை எனவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.