மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையிலிருந்து இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளர்.
ஒன்பது குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த நிலையில், அனைத்துக் கு்றறச்சாட்டுக்களுக்குமான வழக்குகளிற்கும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இன்று மாலை விடுதலையான திருமுருகன் காந்தியை சிறை வாயிலில் மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கூடியிருந்து வரவேற்றனர்.
இதன்போது சிறை வாயிலில் ஊடகவியலாளரிடம் பேசிய திருமுருகன் காந்தி, தமிழ்நாடு அரசு கருத்துரிமையை முழுமையாக முடக்கிவருகிறது என்றும், தமிழகத்தில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஆட்சி நடக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாரதிய ஜனதாக் கட்சியினர் கலவரங்களைத் தூண்டும் வகையில் பேசிவருகின்றனர் என்றும், ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் ஆனால், மக்களுக்காகப் பேசுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்றும் விபரித்துள்ளார்.
தாங்கள் எந்த அடக்குமுறைக்கும் பணியப்போவதில்லை என்றும், விரைவில் விரிவாக தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம் எனவும், தமிழர் விரோத செயல்பாட்டுக்காக தொடர்ந்து அறவழியில் போராடப்போவதாகவும் திருமுருகன் காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.
திருமுருகன் காந்தி கடந்த ஓகஸ்ட் 9ஆம் நாள் வெளிநாட்டிலிருந்து பெங்களூர் வழியாக இந்தியா திரும்பிய போது, பெங்களூர் வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.