நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே உண்டு எனவும், எனவே தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை சனாதிபதி முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம் பெற்றுள்ள நிலையில், இதன் போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மணிக்கூடு கோபுரத்திற்கு அருகிலிருந்து பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், அதனைத் தொடர்ந்து காந்தி பூங்கா முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, ‘இனத்துக்காக போராடியவர்கள் குற்றவாளிகளா?’, ‘நல்லாட்சி அரசே அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்’, ‘பொதுமன்னிப்பு வழங்குவதில் காலதாமதம் ஏன்?’ போன்ற வாசங்கள் அடங்கிய பதாதைகளுடன் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், பிரதேச சபையின் தவிசாளர்கள், பிரதேச சபை, மாநகரசபை உறுப்பினர்கள், இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என்று பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.