அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா அமைப்புக்களுடன் சிங்கள இளைஞர்களும் இணைந்து அநுராதபுரத்தில் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் அனுராதபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று நண்பகல் 12.00 மணியளவில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
“அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்”, “புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை உடனே நிறுத்து” என்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய தமிழ் பதாதைகளுடனும், சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பாதாதைகளை தாங்கிய வண்ணமும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் , முற்போக்கு கூட்டணி , அனுராதபுர விவசாய அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.
போராட்டத்தின் போது வீதி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாமென போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தள்ளியதினால் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கிடையே சிறு கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.