போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் செயல் முறைகளில் அனைத்துலகத் தலையீட்டுக்கு அவசியமில்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க லண்டனில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று மாலை ஒக்போர்ட் யூனியனில் சிறப்புரை ஒன்றை நிகழ்த்தியுள்ள நிலையில், இதன்போதே விசாரணைகளில் அனைத்துலக தலையீட்டுக்கு அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக இப்போதைய சூழ்நிலையில் இலங்கையின் விசாரணைகளில் வெளிநாட்டுத் தலையீடுகளின் தேவையை தாங்கள் உணரவில்லை என்றும் இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த உரையின் போது இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ரணில் விக்ரமசிங்க பதிலளிக்காமல் நழுவினார் என்றும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் இராணுவத்தின் இருப்பை விரும்புவதாக கூறியுள்ளார் என்றும், ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் கீச்சகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஒக்ஸ்போர்ட் யூனியனில் நேற்று மாலை உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவருக்கு எதிராக ஒக்ஸ்போர்ட் யூனியன் கட்டடத்துக்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்றும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.