அமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது.
இதனைத் தெரிவித்துள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங், தற்போது காணப்படும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
இரண்டு நாடுகளும் பெரும் பொருளாதார சக்தியை கொண்டிருக்கின்றன என்றும், அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் சீனாவை மட்டும் பாதிக்க மாட்டாது என்றும், இந்தியாவுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் விபரித்துள்ளார்.
அத்துடன் பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதை அமெரிக்காவின் நடவடிக்கைகள் தடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார விடயங்களில் அமெரிக்கா அதிகளவு தலையிடுகிறது என்றும் அவர் குறைகூறியுள்ளார்.
அனைத்துலக அளவில் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அப்போதுதான் இரண்டு நாடுகளின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் எனவும் சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.