இஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் துருக்கி அதிகாரிகளிடம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால் கசோஜி, அக்டோபர் 2
ஆம் நாள் துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றதன் பின்னர் அவரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான சான்றை துருக்கி உளவுத்துறை அதிகாரிகள் ஆவணப்படுத்தியுள்ளதாக இது தொடர்பாக புலனாய்வு செய்து வரும் குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை மறுத்து வரும் சௌதி அரேபியா, இந்த பத்திரிகையாளர் வந்த வேலையை முடித்து விட்டு தூதரகத்தை விட்டு சென்றுவிட்டதாக கூறுகிறது.