நேபாளத்தின் குர்ஜா சிகரத்தில் ஏற்பட்ட திடீர் பனிப் புயலில் சிக்கி 8 மலையேறிகள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவைச் சேர்ந்த மலையேறிகள் குர்ஜா சிகரத்தின் அடிவாரத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த போது பனிப் புயல் தாக்கியதாக நம்பப்படுகிறது.
உயிரிழந்துள்ள 8 பேரில் நேபாள வழிகாட்டிகளும் அடங்குவதாகவும், இந்த புயலினால் சிதறிக் கிடந்த சடலங்களை, இன்று அதிகாலையில் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர் என்றும் தெரிவிக்கப்படட்டுள்ளது.
அதேவேளை மலையேறியோரில் இன்னும் ஒருவரைக் காணவில்லை என நம்பப்படும் நிலையில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக, மீட்புப்பணியில் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக மீட்புகுழுவினர் தெரிவித்துள்ளனர்.
மீட்புப்பணிக்கு உலங்குவானூர்தி பயன்படுத்தப்படுவதாகவும், இந்த மீட்புப் பணி நாளையும் தொடரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உலகின் ஆக உயரமான 14 மலைச் சிகரங்களில் 8 நேப்பாளத்தில் உள்ள நிலையில், அவற்றில் ஏறுவதற்காக ஒவ்வொர் ஆண்டும் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட மலையேறிகள் அங்கு செல்வது வழக்கமாக உள்ளது.