இலங்கையின் முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கவிழ்க்கப்படாமல் மஹிந்த ஆட்சி நீடித்திருந்தால், தானும், தனது குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டிருப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
தனது தந்தையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்த போதிலும், இலங்கையில் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மீண்டுமொருமுறை ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு கொழும்பு கொலன்னாவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான வழக்கு விசாரணையில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நேற்று முன்தினம் அளிக்கப்பட்ட நிலையில், அதில் குறித்த மரண தண்டனையை மேன்முறையீடு உறுதிப்படுத்தியது.
பாரத லக்ஷ்மன் படுகொலை செய்யப்பட்டு இந்த மாதத்துடன் 7 ஆண்டுகளாகின்ற நிலையில், அவரது புதல்வியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது உரையாற்றிய அவர், மைத்திரி – ரணில் இணைந்த நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறியதினால் தனது குடும்பத்தினரின் உயிர் மஹிந்த ராஜபக்சவிடம் இருந்து காப்பாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இன்னும் மஹிந்த ராஜபக்கவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் தன்னை அல்லது தனது தாயாரை கொலை செய்திருப்பார்கள் எனவும், அல்லது எங்காவது சென்று தாங்கள் தலைமறைவாக வாழவேண்டிய நிலை இருந்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.