இயற்கை விவசாயத்தில் முன்னோடியாக உலகின் முதல் மாநிலமாக விளங்கும் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை விருது அறிவித்து மதிப்பளித்துள்ளது.
இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறியுள்ள சிக்கிம் மாநிலத்தின் மக்கள் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாது விவசாயம் செய்து வருகின்றனர்.
அந்த மாநில முதல்வர் பவன் சாம்லிங் முயற்சியால், நவீன முறை விவசாயத்திற்கு மாற்றாக, பாரம்பரிய விவசாய முறையை கடை பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மிகச் சிறந்த கொள்கைகளை அமல்படுத்தியதற்காக ஐக்கிய நாடுகள் மன்றம் இந்த மாநிலத்தை பெருமைப்படுத்தும் வகையில் விருது அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு வழங்கும் “பியூச்சர் பாலிஸி” என்ற இந்த விருது நிலைக்கத் தக்க வளர்ச்சியை எட்டியதற்காகவும், நீண்டகால திட்டமிடலுடன் செயல்படுத்தியதற்காகவும் வழங்கப்படுகிறது.