காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி துருக்கியில் உள்ள தூதரகத்தில் கொலை செய்யப்பட்டதை சவுதி அரேபியா முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பின்னர் மரணமடைந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சவுதி அரேபிய அரசாங்கத்தின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத் அல்-கத்தானி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள வெள்ளை மாளிகை, விசாரணைகளை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.
ஜமால் காசோஜி இறந்துள்ளதை முதல் முறையாக சவுதி அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்திற்கு சென்றபோது காணாமல் போன நிலையில், அவர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை சவுதி அரசு மறுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.