இலங்கை நாடாளுமன்றத்தை மூன்று வாரங்களுக்கு முடக்கும் உத்தரவை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு நொவம்பர் 16ஆம் நாள் நடைபெறும் என்றும் சபாநாயகர் செயலகம் அறிவித்துள்ளது.
முன்னதாக உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கோரியிருந்தார்.
தாம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்றும், நாடாளுமன்றமே எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்சவுக்கு சாதகமான நிலையை உருவாக்கும் நோக்கில், நாடாளுமன்றத்தை மூன்று வாரங்களுக்கு முடக்கி வைக்க இலங்கை அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த கட்ட நகர்வுகள் எதையும் மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கை பிரதமரின் செயலராக இருந்த சமன் எக்கநாயக்கவையும், இலங்கை அதிபர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.