கொழும்பில் அமைந்துள்ள முக்கிய பிரபுகளின் வீடுகளுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனாதிபதி மாளிகை மற்றும் சனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பிற்கு சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, பெஜட் வீதியில் அமைந்துள்ள சனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விமான படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், கடற்படையினர் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் வீடு மற்றும் அலரி மாளிகையின் பாதுகாப்பிற்கு காவல்துறை சிறப்பு அதிரடைப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் நிறைவேற்று சனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுகின்ற சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய செயற்படுவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
நெருக்கடியான நிலை ஏற்பட்டால் நாட்டில் அனைத்து முகாம்களிலும் உள்ள இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளதாகவும் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.