தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி அதற்கான ஆதரவினை தெரிவிக்க வேண்டும் எனவும், இதற்கு ஆதரவு இல்லாது விட்டால் நடுநிலைமை வகிக்கின்ற முடிவினை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், மைத்திரிபால சிறிசேன எப்போதும் யாருக்கும் விசுவாசமாக இருந்ததில்லை எனவும், தனது சனாதிபதி பதவியை தக்கவைப்பதற்காக இன்னுமொரு தடவை சனாதிபதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய நிலைமையை தோற்றுவித்துள்ளார் என்றும், இத்தகைய நிலைமை தமிழ் மக்களுக்கு எத்தகைய சாதகத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால ஆட்சிக்கு வந்த போது பல விடயங்களை கூறியுள்ளார் எனவும், குறிப்பாக நிறைவேற்று சனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என்றும், தமிழ்மக்களுடைய தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்றும், ஊழல் இல்லாத ஆட்சிமுறைமை உருவாக்கப்படும் என்றும், ஊழல்வாதிகள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள் என்றும் பல விடயங்களை கூறிய போதிலும், இதில் எவையுமே நிறைவேற்றப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த இறுதி நிமிடத்திலாவது நெஞ்சை நிமித்தி தங்களுடைய கோரிக்கை என்ன என்பதை தெரிவிப்பதன் ஊடாகத்தான் குறைந்தபட்சம் அனைத்துலக சமூகத்திற்கோ எமது மக்களுக்கோ அல்லது இந்தியா போன்ற நாடுகளுக்கோ இதனைத் தெரியப்படுத்த முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கோ இலங்கை சுதந்திர கட்சிக்கோ, இவர்கள் யாருக்குமே தமிழ் மக்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக கிஞ்சித்தும் அக்கறை கிடையாது என்பதை தெளிவுபடுத்துகின்ற காலகட்டம் இது என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.