ஒன்ராறியோ மற்றும் சாஸ்காச்சுவான் மாகாணங்களுக்கு இடையே நிலவும் வர்த்தக தடைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை, தாங்கள் இருவரும் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக குறித்த அந்த இரண்டு மாகாணங்களின் முதல்வர்களும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
ரொரன்ரோவில் இன்று இடம்பெற்ற பேச்சுகளைத் தொடர்ந்து, கூட்டாக நடாத்திய ஊடக சந்திப்பில் இருவரும் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
இன்றைய இந்த சந்திப்பின் போது இரண்டு மாகாணங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விபரம் வெளியிட்டுள்ளனர்.
கனேடிய மத்திய அரசாங்கம் அனைத்துலக அளவிலான வர்த்தக இணக்கப்பாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடனான வர்த்தக உடன்பர்டு தொடர்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தாங்கள் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தக உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதாக இதன் போது ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை போட்டித் தன்மையுடன் வைத்துக் கொள்வதற்கு, மாநிலங்கள் இடையேயான வர்த்தக தடங்கல்களை குறைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு உள்நாட்டு அளவில், மாநிலங்கள் இடையேயான தடைகளை அகற்றிக் கொள்வதே, கனடாவுக்கு அதிகளவு முதலீட்டாளர்களை ஈர்க்க வழி செய்யும் என்பதை, பல்வேறு வர்த்தக தலைவர்கள் மூலம் அறிந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.