இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
அதனை அடுத்து நிமல் சிறிபால டி சில்வா – போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சராகவும்,
சரத் அமுனுகம – வெளியுறவு அமைச்சராகவும்,
மகிந்த சமரசிங்க – துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சராகவும்,
மகிந்த அமரவீர – கமத்தொழில் அமைச்சராகவும்,
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – மின்வலு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சராகவும், விஜயதாச ராஜபக்ச – கல்வி, உயர்கல்வி அமைச்சராகவும்,
விஜித் விஜயமுனி சொய்சா – மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி, கிராமிய பொருளாதார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
அதேபோல ஆறுமுகன் தொண்டமான் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சராகவும்,
டக்ளஸ் தேவானந்தா – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள் அமைச்சராகவும்,
பைசர் முஸ்தபா – மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள், விளையாட்டுத்துறை அமைச்சராகவும்,
வசந்த சேனாநாயக்க – சுற்றுலாத்துறை, வனசீவராசிகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று திங்கட்கிழமையன்று இந்த 12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் இருவரும் சனாதிபதி செயலகத்தில் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை நியமித்த 14 அமைச்சர்களில் 4 பேர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து கட்சி மாறியவர்களாவர்.
இவர்களில் விஜேதாஸ ராஜபக்ச மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும், வடிவேல் சுரேஷ் மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோருக்கு முறையே ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.