இந்தோனேசியாவிற்கு சொந்தமான பயணிகள் வானூர்தி ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, அதில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டு வருகின்றனர.
விமானத்தில் இருந்த 189 பேரில் எவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 முக்குளிப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 150 பணியாளர்கள் வானூர்தி விழுந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வானூர்தி கடலில், சுமார் 40 மீட்டர் ஆழத்தில் கிடப்பதாக கூறியுள்ள அவர்கள், வானூர்தியின் சிதைவுகளைக் கண்டுபிடிக்க அவர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான JT610 என்ற வானூர்தி, இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவிலிருந்து சுமத்ராவுக்குக் கிழக்கே பங்க்கா (Bangka) தீவில் இருக்கும் பங்க்கால் பினாங் (Pangkal Pinang) நகருக்குச் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.