இலங்கை நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் எதிர்வரும் 5ம் நாள் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
தனது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனை அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை புதிய பிரதமராக மகிந்தராஜபக்ச பதவி ஏற்றதன் பின்னர், இலங்கை சனாதிபதியால் வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 16ம் நாள் வரையில் இடை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்ற அமர்வை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபடி எதிர்வரும் 5ம் நாள் கூட்டுவதற்கு சனாதிபதி முடிவு செய்திருப்பதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய, நாடாளுமன்றத்தை விரைவாக கூட்டுமாறு கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.