கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், நாட்டின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணமானது அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட்டின் இஸ்ரேலுக்கான முதலாவது பயணம் மட்டுமின்றி, 2015ஆம் ஆண்டில் ஜஸ்டின் ரூடோ பிரதமராக பதவியேற்ற பின்னர் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஒருவர் இஸ்ரேலுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டியா ஃபிறீலான்ட் முன்னதாகவே இஸ்ரேலுக்கான பயணம் ஒன்றினை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த போதிலும், அண்மைக் காலமாக நீடித்து வந்த வர்த்தக பேச்சுவார்த்தை நெருக்கடிகள் காரணமாக அவரது அந்த பயணம் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இஸ்ரேலைச் சென்றடைந்துள்ள
அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், நாளை வெள்ளிகிழமை வரையில் அங்கு தங்கியிருந்த பல்வேறு பேச்சுக்களிலும் நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
ஜோர்தானுக்கான பயணம் ஒன்றினை மேற் கொண்டிருந்த அவர், அங்கிருந்து நேரடியாக இஸ்ரேல் சென்று, அங்கு அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன், நாடு திரும்ப முன்னர் இன்று சில மணி நேரங்கள் அவர் பாலஸ்தீன அதிகாரிகளுடனும் சந்திப்புக்களை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
இதேவேளை தனது இந்த பயணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கிறிஸ்டியா ஃபிறீலான்ட், ஜோர்தான் மக்களுடனும், இஸ்ரேல் மக்களுடனும், பாலஸ்தீன மக்களுடனும் கனேடியர்கள் மிக நீண்டகால நட்பினைக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கனடாவின் முக்கிய பங்காளிகளான இந்த நாடுகளுக்கு இந்த வாரத்தில் தான் பயணம் மேற்கொள்வதாகவும், கனடாவுடன் இந்த நாடுகளுக்கு ஏற்கனவே உள்ள நட்புறவினை பலப்படுத்திக்கொள்ள இந்தப் பயணம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.