விபத்துக்குள்ளான Lion Air வானூர்தியின் கறுப்புப் பெட்டி எனப்படும் தகவல் பதிவு பெட்டி கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வானூர்தியின் முக்கியப் பகுதியை மீட்பதில் கவனம் செலுத்தி வரும் அதிகாரிகள், விமானம் விபத்துக்குள்ளாக என்ன காரணம் என்பதைக் கண்டறியவும் தீவரமாக முயன்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 10.15 மணிக்கு மேற்கு ஜாவா அருகே தகவல் பதிவு பெட்டி ஒன்றை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விமானத்திலும் குரல் பதிவு, தகவல் பதிவு ஆகியவற்றுக்காக இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்தப் பெட்டி மீட்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வானூர்தி பறக்கும் வேகம், உயரம், திசை ஆகியன தகவல் பதிவுப் பெட்டியிலும், விமானி அறையின் செயல்பாடுகள் குரல் பதிவுப் பெட்டியிலும் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த திங்கட்கிழமை இந்தோனேசியத் தலை நகர் ஜகர்த்தாவிலிருந்து பங்கால் பினாங் நகரத்திற்கு 189 பேருடன் புறப்பட்ட குறித்த வானூர்தி, புறப்பட்ட 13 நிமிடங்களில் கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதுடன், இதில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.