ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தடைகளை விதித்த நிலையில், தற்போது இரண்டாவது கட்டமாகவும் புதிய தடைகளை விதித்துள்ளது.
ஈரானை ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்றவைக்க வலியுறுத்துவதற்கான முயற்சியின் ஒருபகுதியாக அமெரிக்க அதிபர் மீண்டும் இந்த பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை 2015ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கையை முழுமையாக செயல்படுத்துமாறும், ஈரான் தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும், ஈரானுடனான இந்த உடன்படிக்கையைத் தொடரும் பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகள் வலியுறுத்தியிருந்தன.
2015-ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்த அணுவாயுத ஒப்பந்தத்தின்படி இஸ்லாமிய குடியரசு நாடான இரான் மீதான சர்வதேச தடைகள் நீக்கப்பட்டு நிவாரணம் பெறுவதற்காக சர்ச்சைக்குரிய அணுசக்தி செயல்பாடுகளில், கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதற்கு ஈரான் ஒப்புக்கொண்டது.