பழைய குரோதங்கள் மற்றும் கசப்பான சம்பவங்களைப் புறந்தள்ளி, கொள்கை அடிப்படையில் கட்சிகள் ஒன்று சேர்ந்து செயற்படுவது அவசியம் என்று, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாராந்த கேள்வி பதில் பகுதியில் கனேடிய ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாங்கள் யாவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது எனவும், ஆனால் கொள்கை ரீதியாக நாம் பயணிக்க விரும்பினால் எம் கட்சிகளின் நலவுரித்து பின் ஆசனத்திற்குப் போக வேண்டி வரும் என்றும், கட்சி நலன்களையும் எமது முன்னைய பின்னணிகளையும் மற்றையவர்களின் முன்னைய பின்னணிகளையும் கணக்கில் எடுத்து பயணிக்கத் தொடங்கினோமானால் எமது ஒற்றுமை குலைந்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரே கொள்கைகள் உடைய சில கட்சிகள் தமது கட்சி நலன்கள் சார்ந்து வேற்றுமைப்படப் பார்க்கின்றன என்பதுடன், குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், கட்சிகள் தமது கொள்கைகளில் திடமாக இருக்க வேண்டும் எனவும், ஆனால் தேர்தல் என்று வந்தவுடன் ஒரே கொள்கைகளில் இருக்கும் கட்சிகள் தேர்தல் உடன்பாடுகளில் இறங்குவதில் பிழையில்லை என்றே நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது கொள்கைகள் மக்களுக்காக இயற்றப்பட்டவை என்ற வகையில், நாம் அவ்வாறான பொதுக் கொள்கைகளை இயற்றி விட்டு சிலரின் முகங்கள் எமக்குப் பிடிக்கவில்லை என்று ஒதுங்கிச் செல்வது மக்களுக்குத் துரோகம் செய்யும் செயலாக முடியக் கூடும் எனவும், கட்சிக்காக மக்களின் நலவுரித்துக்களை உதாசீனம் செய்வதாக முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைக் காலங்களில் எமது மக்கள் எந்த அரசியல் கட்சிகளின் பின்புலமும் இன்றி பல போராட்டங்களை நடத்தி இருக்கின்றார்கள் என்பதுடன், நடத்தியும் வருகின்றார்கள் எனவும், கேப்பாப்பிலவில் மக்கள் நடத்திய போராட்டம் இதற்கு சிறந்த உதாரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மக்கள் போராட்டங்களினால் அடைய முடியாத பல விடயங்கள் இருக்கின்றன எனவும், அவற்றை அரசியல் ராஜதந்திர போராட்டங்களின் மூலம் அடைய முடியும் என்றும், அதேபோல அரசியல் ராஜதந்திர போராட்டங்கள் மூலம் அடைய முடியாத பல விடயங்களை மக்கள் இயக்க போராட்டங்கள் மூலம் அடைய முடியும் என்றும், தனது உரையில் குறிப்பிட்டபடி, பழைய குரோதங்கள் மற்றும் கசப்பான சம்பவங்களைப் புறந்தள்ளி, கொள்கை அடிப்படையில் கட்சிகள் ஒன்று சேர்ந்து செயற்படுவது அவசியம் என்பதே தனது விருப்பம் எனவும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.