தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மகிந்தவின் பக்கம் கட்சி தாவியுள்ளதுடன், கிழக்கு மாகாணத்துக்கான பிரதேச அபிவிருத்தி பிரதியமைச்சராக அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் புளட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஊடாக கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்றிற்கு தேர்வுசெய்யப்பட்டவர் என்பதோடு, அந்த அமைப்பின் சனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதி தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் இவரது கட்சித் தாவல் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள புளட் அமைப்பு, கடந்த சில நாட்களாக வெளிநாடுகளுக்கு பயணத்தினை மேற்கொண்டு இன்று அதிகாலை தாயகம் திரும்பும் வரை, கட்சியின் தலைமையுடன் தொடர்புகளை கொண்டிருந்த வியாளேந்திரன், நாடு திரும்பியதும் மேற் கொண்டுவரும் அரசியல் நடவடிக்கைகள் தம்மால் புரிந்து கொள்ள முடியாதவையாகவுள்ளன எனவும், இன்று கட்சியின் சார்பில் அவருடன் தொடர்புகொள்ள தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகள் எவையும் பயனளித்திருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இன்று நடந்த விடயங்கள் யாவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அதன் தொடராகவே நடந்தேறியவை என்பதை தம்மால் நம்பமுடியாமல் உள்ளது எனவும், அண்மைய நாட்களில் அவரின் செவ்விகள், கலந்துரையாடல்களை அவதானித்தோருக்கும் அவரது இன்றைய தீர்மானம் மிகுந்த அதிர்ச்சியையே கொடுத்திருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது கட்சியின் தலைவர் சித்தார்த்தன், வியாளேந்திரன் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கைக்கு இழைத்த துரோகமாகவே அவரது இன்றைய நடவடிக்கைகளை காண்பதாகவும், கட்சியின் கட்டுக்கோப்பையும் தீர்மானத்தையும் மீறியதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு முரணான வகையில் செயற்பட்டிருக்கும் வியாளேந்திரன்மீது விரைவில் கட்சியின் மத்தியகுழுவினூடாக ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து அத்தீர்மானத்தை தமிழரசுக் கட்சியின் மேலதிக நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் எவரும் எதிர்பார்த்திராத வகையில் அமைந்த அவரது செயற்பாடு, கட்சியின் அங்கத்தவர்களும், அவரைத் தேர்ந்தெடுத்த மக்களும், அவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையின்மீது பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பதை தெரியப்படுத்துவதாகவும புளொட் அமைப்பின் நிர்வாகச் செயலாளர் பத்மநாதன் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மகிந்த தரப்புக்கும் சித்தார்த்தன் தரப்புக்கும் இடையே இடம்பெற்ற நேரடி பேச்சுக்களின் விளைவாகவே இந்த கட்சித் தாவல் இடம்பெற்றதாகவும், இந்த கட்சித் தாவலுக்காக 48 கோடி ரூபாய் பேரம் இடம்பெற்றுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.