அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது இன்று விதிக்கவுள்ளது.
2015 அணு ஆயுத ஒப்பந்தம்படி நீக்கப்பட்ட தடைகளை ஈரான் மீதும் அதனுடன் வர்த்தகம் செய்யும் அரசுகள் மீதும் டிரம்பின் நிர்வாகம் மீண்டும் விதிக்கவுள்ளது.
இது எண்ணெய் ஏற்றுமதி, வர்த்தக போக்குவரத்து, வணிகம் என அனைத்து விதத்திலும் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் அமெரிக்காவின் இந்த தடை விதி்ப்பிற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதனிடையே தங்கள் நாட்டின் பாதுகாப்பு வலிமையை காட்ட திங்களன்றும், செவ்வாயன்றும் விமான அணிவகுப்புகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது ஈரான் இராணுவம், அதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த தடையை ஏற்க மறுத்துள்ள குறித்த நாடுகள், ஈரானுடனான வர்த்தகத்தை டொலர் இன்றி வேறு விதமான பணபரிமாற்றத்துடன் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளன.