ஒன்ராறியோ மாநில அரசின் அமைச்சரவை இன்று திங்கட்கிழமை முதல்வர் டக் ஃபோட்டினால் மாற்றியமைக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், குறைந்தது ஆறு அமைச்சர்களின் அமைச்சுப் பொறுப்புக்களை மாற்றும் அறிவிப்பினை இன்று டக் ஃபோட் வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த மாற்றத்தின் கீழ் ஒருவருக்கு புதிதாக அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், மற்றும் ஒரு அமைச்சருக்கு மேலதிக அமைச்சுப் பதவி வழங்கப்படும் எனவும், ஏனைய குறைந்தது நான்கு அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்ராறியோவின் பொருளாதார அபிவிருத்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்கல் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த ஜிம் வில்சன் அண்மையில் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த புதிய அமைச்சரவை மாற்றம் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அமைச்சரவை மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிமை ஜிம் வில்சன் அமைச்சரவையில் இருந்து விலகியமை, டக் ஃபோட்டுக்கு இந்த அமைச்சரவை மீளமைப்பை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.