இலங்கை நாடாளுமன்றம் நேற்றிரவு இலங்கை அதிபரால் கலைக்கப்பட்டமை குறித்து பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கவலையும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளன.
ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட், கீச்சகப் பதிவு ஒன்றில் – இலங்கையின் ஒரு நண்பனாக, அனைத்து தரப்புகளும் அரசியலமைப்பை பின்பற்றுமாறு பிரித்தானியா கோருகிறது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் சனநாயக நிறுவனங்களையும், செயல்முறைகளையும் மதித்துச் செயற்படுமாறும் இலங்கையை பிரித்தானியா கோருகிறது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள கனடிய வெளிவிவகார அமைச்சு, இது போருக்குப் பிந்திய நல்லிணக்கப் பணிகளை ஆபத்துக்குள்ளாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கனடிய வெளிவிவகார திணைக்களத்தின் கீச்சகப் பக்கத்தில் இடப்பட்டுள்ள பதிவில், அரசியல் நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவது, இலங்கையின் சனநாயக எதிர்காலத்தையும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளையும் சிதைத்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் பைன், இலங்கை நிலவரம் குறித்து அதிர்ச்சியும், கவலையும் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் இந்த நடவடிக்கையானது இலங்கையின் நீண்ட சனநாயக பாரம்பரியத்தை சிதைப்பதாகவும், உறுதிப்பாடு மற்றும் செழிப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.