உலகில் நிலவும் வறுமை நிலையை இல்லாது ஒழிப்பதற்கு, கருத்தடை, கருக்கலைப்பு உள்ளிட்ட குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை ஏனைய நாடுகளிலும் செயற்படுத்துமாறு கனடா தொடர்ந்து வலியுறுத்தும் என்று அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்றிலிருந்து எதிர்வரும் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள குடும்ப கட்டுப்பாடு தொடர்பிலான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று ருவாண்டா நாட்டுக்கு சென்றுள்ள கனடாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் மேரி க்ளவுட் பிபேயு(Marie-Claude Bibeau) இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நிலையில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இவ்வாறான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதனை கனடா ஏனைய நாடுகளுக்கு காட்டமாக வலியுறுத்தும் என்றும் கூறியுள்ளார்.
குறித்த இந்த விடயம் சில வட்டாரங்களில் சர்ச்சைக்குரிய விவகாரமாக காணப்படுகின்ற போதிலும், இததனை தொடர்ந்து வெளிப்படையாக வலியுறுத்துவதற்கு கனடா பின்னிற்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.