எதிர்க்கட்சிகள் யார் ஒன்றிணைந்தாலும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று ஊடகவியலாளரிடம் கருத்துத் தெரிவித்த அவர், ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராக தற்போது புதிதாக தலைவர்களையோ, கட்சியினரையோ யாரையும் இணைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே அவர்கள், பாரதிய ஜனதாக் கட்சிக்கு மற்றும் பிரதமர்மோடிக்கு எதிராக இருந்தவர்கள்தான் என்றும், எந்த விதத்திலும் தங்களுடன் உடன்வராதவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் யார் ஒன்றிணைந்தாலும், யாரை ஒருங்கிணைத்தாலும் அது பாரதிய ஜனதாக் கட்சியை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதே தங்களது குறிக்கோள் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அதற்காகவே பல நல்ல திட்டங்களை பிரதமர் மோடி அந்த நாட்டுக்கு எடுத்துச் சென்று கொண்டு இருக்கிறார் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
அத்துடன் தற்போது அங்குள்ள அரசியல் சூழலைப் பற்றி எதுவும் கூறுவதற்கு இல்லை என்றும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.