இலங்கை வெளிவிவகார அமைச்சராக தற்போது மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டுள்ள சரத் அமுனுகம விடுத்த அழைப்பை எட்டு மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் நிராகரித்துள்ளனர்.
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, மேற்குலக இராஜதந்திரிகள் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விளக்கமளிப்பதற்கான கூட்டம் ஒன்றுக்கு கொழும்பில் உள்ள 43 நாடுகளின் தூதுவர்களுக்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம இன்று அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தக் கூட்டத்தை பிரித்தானியா, நெதர்லாந்து, நோர்வே, பிரான்ஸ், அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, இத்தாலி, மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் புறக்கணித்துள்ளனர்.
அதேவேளை, அமெரிக்கா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் தமது பிரதிநிதிகளை அனுப்பியுள்ளதுடன், இந்தியா தனது இளநிலை இராஜதந்திரி ஒருவரை இந்தக் கூட்டத்துக்கு அனுப்பியுள்ளது.
எனினும் சீனா, கியூபா, ஆப்கானிஸ்தான், துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 வரையான நாடுகளின் தூதுவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம, கடந்த வாரங்களில் இடம்பெற்ற அனைத்து நகர்வுகளும் அரசியலமைப்புச் சட்டத்தின்படியே முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
எந்த நாடும் கொடைகள், சலுகைகள், கடன்களை நிறுத்துவது தொடர்பாக, கூறவில்லை என்றும், கூட்டத்தின் பின்னர் அவர் கூறியுள்ளார்.