பத்திரிகையாளர் கஷோக்ஜி கொலைக்கும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பில்லை என்று சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.
கஷோக்ஜியை கொல்வதற்கு தங்களது உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரே உத்தரவிட்டதாகவும், இந்த சம்பவத்திற்கும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பில்லை என்றும் சௌதி அரேபியா விளக்கமளித்துள்ளது.
சௌதி அரேபியாவின் செயல்பாட்டில் கருத்து வேறுபாடு கொண்ட கஷோக்ஜியை மீண்டும் சௌதிக்கு அழைத்து வருவதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்காக அந்த அதிகாரி நியமிக்கப்பட்டதாக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்தான்புல்லிலுள்ள சௌதி அரேபியாவின் தூதரகத்தில் ஒக்டோபர் மாதம் 2ஆம் நாள் கஷோக்ஜிக்கு மரணம் விளைவிக்கும் ஊசி செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கஷோக்ஜி மரணம் தொடர்பாக 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், அதில் ஐந்து பேருக்கு மரண தண்டனை வழங்குவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர் மாதம் 2ஆம் நாள் துருக்கியில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்திற்கு சென்றிருந்த நிலையில் பத்திரிக்கையாளர் கஷோக்ஜி காணாமல் போயிருந்தார்.
பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து அவர் அங்கு வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.