பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்வதற்கான உத்தரவை சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான் அளித்தார் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி ஐ ஏ நம்புவதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
இது தொடர்பான ஆதாரங்களின் விரிவான மதிப்பீட்டை சி ஐ ஏ செய்துள்ளதாகவும், தனது கண்டுபிடிப்புகளை அது அமெரிக்க அரசாங்கத்துக்குத் தகவலாக அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பட்டத்து இளவரசர் சல்மானின் சகோதரரும் அமெரிக்காவிற்கான சௌதி தூதருமான காலித் பின் சல்மான் செய்த ஒரு தொலைபேசி அழைப்பை வைத்து, சி ஐ ஏ மதிப்பீடு செய்துள்ளதாக வோஷிங்டன் போஸ்ட் ஊடகம் தெரிவிக்கிறது.
காலித், கஷோக்ஜியை தொலைபேசியில் அழைத்து, அவர் தூதரகத்துக்கு பாதுகாப்பாக செல்லலாம் என உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை இந்த செய்தி தொடர்பாக வெள்ளை மாளிகையோ அல்லது அமெரிக்க வெளியுறவுத்துறையோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.