தருமபுரி குற்றவாளிகள் 3 பேர் விடுதலையில் காட்டிய தீவிரம் 7 பேர் விடுதலையில் இல்லாமல் போனது ஏன் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் ஆயுள் தண்டனை குற்றவாளிகளான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மூவரை, ஆளுநரின் ஒப்புதலோடு, தமிழக அரசு இன்று வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்திருப்பதும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்கும் சட்ட வாய்ப்புகள் உரிமைகள் அதிகம் இருந்தும் அவர்கள் விடுதலையை தாமதிப்பதும்; பாரபட்சமானதும், அரசியல் தன்மை மிக்கதும், அநீதியானதுமாகும் என்று விபரித்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் இந்த ஓரவஞ்சனைச் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2000ஆம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது பேருந்து எரிக்கப்பட்டதில் மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தைச் சேர்ந்த குறித்த 3 உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது.
பின்னர் அவர்கள் மேற் கொண்ட மேன் முறையீட்டில் மூவருக்கும் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ள நிலையில் அவர்கள் ஆயுள் தண்டனைக் கைதிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது தமிழக அரசுக்கு உள்ள உரிமையைப் பயன்படுத்தி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறையில் உள்ளவர்களை தேர்தெடுத்து விடுதலை செய்து வருகின்றது.
இந்த நிலையிலேயே ஆளுநரின் ஒப்புதலோடு ஆயுள் தண்டனை பெற்றிருந்த தருமபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகள் மூவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.