நாட்டின் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில், இலங்கையால் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்களைச் செலுத்த முடியாத நிலைமை ஏற்படும் என்று, இலங்கையின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.
நாடுகளின் நிதி நிலைமை தொடர்பாக ஆராயும் மூடீஸ் நிறுவனம், இலங்கையின் கடன் தரப்படுத்தலைத் தரமிறக்கிய பின்னணியிலேயே, முன்னாள் நிதியமைச்சரான மங்கள சமரவீர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி, நாட்டை பொருளாதாரப் படுகுழிக்குள் தள்ளும் ஆபத்து உள்ளது எனவும், குறிப்பாக எதிர்வரும் சனவரி 10ஆம் நாள், 1 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் மதிப்பிலான இறையாண்மைப் பிணைமுறியொன்று முதிர்ச்சியடைகின்ற நிலையில், தற்போதைய நெருக்கடி நீண்டு செல்லுமாயின், அந்தக்கடனைச் செலுத்த முடியாத நிலை ஏற்படாலாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த சில வாரங்களுக்குள், வரவு – செலவுத் திட்டத்தை அங்கிகரிக்காவிட்டால், எதிர்வரும் சனவரி முதலாம் நாளில் இருந்து அரசாங்கத்தால் எந்தவிதப் பணத்தையும் செலவிட முடியாமல் இருக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த மாதம் 5ஆம் நாள், வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு தாங்கள் திட்டமிட்டிருந்த நிலையில், மைத்திரி – மகிந்த கூட்டால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக அது சாத்தியப்படவில்லை எனவும், இவை அனைத்தும் ஒரு நபரின் அதிகாரத் தேவைக்காக ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களே என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
பாதீடொன்று அங்கிகரிக்கப்படாவிட்டால், அரச துறையினருக்குச் சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட, மக்கள் பணத்தை முகாமைத்துவம் செய்யும் அரச செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக முடங்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே 2019ஆம் ஆண்டுக்காகத் தாம் தயார் நிலையில் வைத்துள்ள வரவு – செலவுத் திட்டத்தைக் கொண்டுவர இடமளிக்க வேண்டும் என்றும், தமது தரப்புக்குப் பெரும்பான்மை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதால் மாத்திரமே, நாடு பொருளாதார ரீதியில் எதிர்கொள்ளவுள்ள பெரும் நெருக்கடியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியுமெனவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலையின் பெறுமதி படி, இலங்கை ரூபாயின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி இன்றையநாள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.04 ரூபாயாக பதிவாகியுள்ளது.