செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நீக்க வேண்டும் என்ற அறைகூவல்கள் அபாயகரமானவை என்றும், அவை நடப்பதற்கு சாத்தியமேயில்லை என்றும் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் அடேல் அல்-ஜுபேர் தெரிவித்துள்ளார்.
சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை தொடர்பாக உலகின் பல நாடுகளிலும் எதிர்ப்பு குரல்கள் மற்றும் கண்டனங்கள் உள்ள நிலையில் அனைத்துலக ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த போது அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் கடந்த ஒக்டோபர் மாதம் 2ஆம் நாள் நடந்த கஷோக்ஜியின் கொலையில் செளதி இளவரசருக்கு எந்த பங்கும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கஷோக்ஜியின் கொலையில் சல்மானுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் கோரிக்கை விடுத்ததற்கு அடுத்த நாளில் செளதி அமைச்சரின் இந்த மறுப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் ஜமால் கஷோக்ஜி மிருகத்தனமாக கொல்லப்பட்டது குறித்து சௌதியின் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தெரிந்திருக்கும் அல்லது தெரியாமல் கூட இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட விவகாரத்தில் உலக நாடுகளிடமிருந்து கடும் கண்டனங்களை சௌதி அரேபியா பெற்றபோதும், அந்த நாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.