நாளை மாவீரர் நாள் நினைவுகூரல் பிரதான நிகழ்வுகளுககாக தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் எழுச்சியுடன் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் 2018 மாவீரர் நாளுக்காக தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அரசியல் கட்சி வேறுபாடுகளைக் கடந்த அனைத்துத் தரப்பினர்களும் இணைந்து மாவீரர் நாளுக்குரிய பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்தோடு எவ்வித தடைகளும் நெருக்கடிகளும் இன்றி மாவீரர் நாள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், அனைத்துத் தமிழ் மக்களையும் உணர்வுப்பூர்வமாக இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் மாவீரர் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை உரிய நேரத்தில் உறவுகளால் கடைப்பிடிக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ஜந்து மாவீரர் துயிலுமில்லங்களில் நாளை மாவீரர்நாள் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
2009ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட 7 துயிலுமில்லாங்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், வன்னிவிளாங்குளம், முள்ளியவளை களிக்காடு, புதுக்குடியிருப்பு இரணைப்பளை, இரட்டை வாய்க்கால் மற்றும் முள்ளிவாய்க்கால் என்று ஜந்து மாவீரர் துயிலுமில்லங்களில் நாளை உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளியவளை மற்றும் அளம்பில், விசுவமடு மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் மாவீரர்நாள்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தேவிபுரம் மற்றும் வளைஞர்மட மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
மணலாறு பெருங்காட்டு பகுதியில் உள்ள ஜீவன் மாவீரர் துயிலுமில்லம் 10 ஆண்டுகளாக சிறிலங்கா இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 3 மாவீர் துயிலும் இல்லங்கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவேந்தல் கடைப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
வாகரை கண்டலடி, தரவை, மாவடிமுன்மாரி ஆகிய 3 துயிலும் இல்லங்களில் நினைவு நாள் கடைப்பிடிப்புக்காக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து துயிலுமில்லங்களில் சிரமதானம் மேற்கொண்டு அங்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
தாண்டியடி மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் சிறப்பு அதிரடிப்படை முகாம் உள்ளமையால் அங்கு நினைவேந்தல் செய்யமுடியாத நிலை காணப்படுவதால் தாண்டியடி சந்தியில் நினைவேந்தல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு பல்கலைக்கழகம், விபுலானந்த அழகியல் கற்கை நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் மாவீரர் நினைவேந்தல்கள் மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை திருகோணமலை – சம்பூர், ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தற்பொழுது மக்களால் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.
நாளை மாவீரர் நாளை கடைப்பிடிக்கும் முகமாக இந்த துயிலுமில்லம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.
நாளை மாலை 6.05 மணியளவில் வழமை போன்றே மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.