2018 நவம்பர் 27 செவ்வாய் கிழமை அன்று, வழமை போன்றே இம்முறையும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரத்தெய்வங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்படும் திருக்கோவிலில், ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க, மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மண்டப நிகழ்ச்சியாக மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படாத நிலைமையிலும், தூரப்பிரதேசங்களில் இருந்து நினைவேந்தலில் கலந்து கொள்ளும் உறவுகளின் இரவு நேரம் மற்றும் மழைக்கால போக்குவரத்துகளை வசதிப்படுத்துவதை கவனத்தில் கொண்டும், நகரசபை உள்ளக மண்டபத்தில் நினைவேந்தலை அனுட்டிப்பதென வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைமைக்குழுவால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து, எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மான மாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற – மதிப்பளிக்கின்ற நாள், ‘தமிழீழ தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 27′ என்பதனை அது சுட்டிக்காட்டியுள்ளது.
‘எங்களின் சாவு உங்களின் வாழ்வு’ எனச்சொல்லி வீழ்ந்தவர்களை, விசுவாசமாகவும் – நன்றியுணர்வாகவும் நினைந்துருகி வழிபடும் உயர்குலப்பண்பாட்டின் செல்நெறிநின்று, மாவீரத்தெய்வங்களை நெஞ்சத்தில் உயர ஏந்திப்பிடித்து கர்வத்தோடும் – பெருமையோடும் அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்தியே வந்திருக்கிறது தமிழர் தேசம்!
கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே போதும், தாயகம் – தமிழகம் – புலம்பெயர் தேசங்கள் எங்கும் சுயமாகவே எழுச்சி கொண்டு ‘விடுதலைக்கான வேட்கையோடு’ நிற்கிறார்கள் தமிழர்கள் எனவும், எங்கிருந்து தான் வந்து சேருகிறதோ? இதற்கான பலம் – நலம் – சக்தி என்றும், இந்த மிடுக்கையும், அழகையும் கொடுக்கும் ஆதிமூலமே “துயிலறைக் காவியங்கள்” தான் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றே தமிழ் மக்களின் மனோநிலையை பிரதிபலித்தவர்கள், யார் எம்மை நிர்ப்பந்திப்பினும் வல்வளைப்பு செய்யினும், ‘பணிந்தும் – குனிந்தும் கொடாமல், சேவகம் செய்து கெடாமல், நம்மால் முடிந்ததை செய்கின்றோம் – முடியவில்லை என்கிறபோது செத்து மடிகின்றோம்’ என்று தாம் வரித்துக்கொண்ட உயரிய கொள்கைக்காகவே வாழ்ந்தவர்கள் – வீழ்ந்தவர்கள் மாவீரர்கள் என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
பௌத்த பேரினவாத சிந்தனைக்குள் ஊறி, உப்பி உருப்பெருத்துக்கிடக்கும் இலங்கை நாட்டுக்குள், தமிழ் மக்கள் தமது முடிக்குரிய ஆட்சி நிலத்தை பாதுகாத்துக்கொள்ளவும், அந்த நிலத்தில் தங்களுக்கே உரித்தான மொழி கலை கலாசாரம் மரபுரிமைகளை நிலைநிறுத்திக்கொள்ளவும், தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக – மீட்பர்களாக – மரபு வழிப்படையணியாக எழுச்சிபெற்று, கட்டமைக்கப்பட்ட ‘தமிழீழ நடைமுறை நிர்வாக அரசை’ நிறுவியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஒன்றே, தமிழ் மக்களின் ஒரே ஏகப்பிரதிநிதிகளாவர் எனவும் அது தெரிவித்துள்ளது.
தமிழர் தேசத்தின் அசைவியக்கமாகிய இந்த மாபெரும் தூய விடுதலை இயக்கத்தின் கொள்கை வழி நின்று, உண்மை வாழ்க்கை வாழ்ந்து, தமிழ்மொழி பேசும் மக்களின் வாழ்வுரிமைக்காகவும் – அரசியலுரிமைக்காகவும் ஆயுதமொழி பேசி, தமிழ்மொழி பேசும் மக்களுக்கு மிடுக்கையும் அழகையும் கொடுத்து, தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற – மதிப்பளிக்கின்ற தேசிய எழுச்சி நாளே மாவீரர் நாள்: நவம்பர் 27.
ஈழதேசத்திலே ‘மக்களுக்காக மக்கள்’ நடத்திய, தமிழ்த்தேசிய இனத்தின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தின்பால் உள்ளீர்க்கப்பட்டு, ‘விடுதலை’ எனும் மகாவிருட்சத்துக்காக தமது உடல்களை இலட்சிய விதையாக்கிய போராளிகளையும், அந்த விதைகளுக்காக தமது இரத்தம், கண்ணீர், தசை, உயிர்களை உரமாக்கிய அனைத்து உறவுகளையும், ஈகையர்களையும், கொடையாளர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், மாமனிதர்களையும் நெஞ்சத்தில் இன்னும் இன்னும் உயர உயர ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்துவோமாக என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாவீர ஆத்மாக்களின் வீரம் செறிந்த கதைகளை ஆவணமாக்கி – பத்திரப்படுத்தி அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கும் எடுத்தியம்பும் தேசியப் பெரும் பணியை – தேசியக்கடமையை, ‘தரம் தாழ்ந்துபோகாது சிரம் உயர்த்தி’ நிறைவேற்றுவோம் என்று உறுதி ஏற்குமாறும், தாயகம் – தேசியம் – சுயநிர்ணயம் கோட்பாடுகளில் பற்றுறிதியோடு நிற்கும் மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
2018 நவம்பர் 27 செவ்வாய் கிழமை அன்று, வழமை போன்றே இம்முறையும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரத்தெய்வங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்படும் திருக்கோவிலில் ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மண்டப நிகழ்ச்சியாக மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடவே ‘எனது மொழி தமிழ், எனது பிறப்பு தமிழன் – தமிழிச்சி’ என்று உணருக்கின்ற ஒவ்வொரு தமிழ் பிரஜையையும், நவம்பர் 27 அன்று மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு தத்தமது இல்லங்களின் வாசல்கள் தோறும் நெய் விளக்கேற்றி மண்ணுறங்கும் ‘மாவீரத்தை’ தட்டி எழுப்பி கௌரவப்படுத்தும் தேசிய பெரும் பணியை – தேசியக்கடமையை, ‘தரம் தாழ்ந்துபோகாது சிரம் உயர்த்தி’ நிறைவேற்றுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.