இலங்கையில் மகிந்தவுடன் இணைந்து மைத்திரி மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வியடைந்துள்ள போதிலும், தேர்தல் மூலம் அந்த ஆட்சியதிகாரத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணம் மகிந்த ராஜபக்ச தரப்புக்கு ஏற்பட்டுள்ளதாக “ஃபொரின் பொலிஸி” என்ற அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு விரோதமாக செயற்பட்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை கவிழ்த்ததுடன், இதனையடுத்து சட்டவிரோதமாக மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அவரால் அந்த ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளமுடியவில்லை என்பதுடன், இது அவரைப் பொறுத்த வரையில் தோல்வியாக கருதப்படுகின்ற போதிலும், அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை என்பதை அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோன்று அவரால் நியமிக்கப்பட்ட மகிந்தவும் பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை எனவும், எனவே இருவரும் தாம் தீர்மானித்த தேர்தல் ஒன்றுக்கு செல்வதையே குறியாக கொண்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.
புதிதாக தேர்தல் ஒன்றினை நடாத்துவதன் மூலம் மீண்டும் தங்களின் ஆட்சியை
பிடிக்கலாம் என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.