மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு இந்திய மத்திய அரசு கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை கண்டித்து அனைத்துக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவரம் எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் முன்னெடுக்கப்பட்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், மேகதாதுவிலே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேகதாதுவிலே அணை கட்டி 66 டிஎம்சி தண்ணீரை தேக்கினால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராது தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டம் அரசியலுக்காகவோ, தேர்தலை எதிர் நோக்கியதாகவோ இல்லை என்றும், இது விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதற்கான போராட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இயற்கையின் செயலை யாரும் தடுத்திட முடியாது என்றும், ஆனால் செயற்கையான சதியைச் செய்யும் பாரதிய ஜனதா அரசை தமிழக மக்கள் ஒருகாலமும் மன்னிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தின் மீது பாரதிய ஜனதாக் கட்சி பாசம் காட்டுவதாகவும், தமிழகத்திலே அந்த கட்சி காலூன்ற முடியாது என்பது மோடிக்கு நன்றாகத் தெரிந்திருப்பதனால் தமிழகத்திற்கு அவர் ஓரவஞ்சனையை தொடர்ந்து செய்துகொண்டிருக்கக்கூடிய நிலை காணப்படுவதாகவும் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
இதனை தட்டிக் கேட்க வேண்டிய தமிழக அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது என்றும் ஸ்டாலின் சாடியுள்ளார்.