புதிய சமஷ்டி முறை பிரிவினை அரசமைப்பு வருவதை தடுக்கவே தான் ஆட்சியை கைப்பற்றியதாக, மகிந்த ராஜபக்ச இன்று கூறுகிறார் எனவும், இது ஒரு தந்திரமான போலித்தனமும், கேலித்தனமும் நிறைந்த கட்டுக்கதை என்றும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், புதிய சமஷ்டி பிரிவினை அரசமைப்பு ஒன்று கொண்டுவரப்பட இருந்த நிலையில், அதை தடுக்கவே தான் தலைமை அமைச்சர் பதவியை ஏற்று ஆட்சியை கைப்பற்றினேன் என்று கூறும் மகிந்த, இன்று நடிகர் வடிவேலு மாதிரி நகைச்சுவை செய்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாசுதேவ நாணயக்கார முதல் முறை மைத்திரியிடம் உரையாடி விட்டு, தன்னிடம் வந்து தலைமை அமைச்சர் பதவியை ஏற்க சொன்னபோது தான் வேண்டாம் என்றதாகவும், இரண்டாம் முறையும் வந்த போது அதை ஏற்றுக்கொண்டதாகவும் மகிந்த தெரிவித்துள்ளதையும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாம் முறை மைத்திரியிடம் உரையாடி விட்டு வாசுதேவ நாணயக்கார தன்னிடம் வந்து தலைமை அமைச்சர் பதவியை ஏற்க சொன்ன போது, அதை நான் ஏற்றுகொண்டதன் காரணம், ரணில் அரசாங்கம் ஒரு புதிய சமஷ்டி பிரிவினை அரசமைப்பை கொண்டுவர இருந்தது எனவும், அதை தடுக்கவே நான் தலைமை அமைச்சர் பதவியை ஏற்று ஆட்சியை கைப்பற்றினேன் என்றும் மகிந்த ராஜபக்ச போலித்தனமாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய ஒரு காரணத்தை கூறி தனது பதவி ஆசையை மறைக்க மகிந்த ராஜபக்ச முயற்சி செய்கிறார் எனவும், பதவி அதிகாரத்தை பெற்று தங்கள் குடும்ப அங்கத்தவர் மீதான வழக்குகளை தடுக்க முயற்சி செய்வதை மறைப்பதற்காக இன்று அவர் வெட்கமில்லாமல் இனவாதத்தையும் தூண்டி விடும் கருத்தை கூறுகிறார் என்றும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.